வியாசர் தொடர்ந்து தேவியின் பிரபாவங்க ளோடு பௌதிகரீதியாகவும், சாஸ்திரப்பூர்வ மாகவும் சொன்ன தகவல்களால் ஜெனமேஜெயன் விக்கித்துப் போயிருந்தான். அவனது சிற்றறிவால் வியாசர் கூறியதையெல்லாம் முழுமையாக உள்வாங்கி சிந்திக்கக்கூட முடியவில்லை.
எத்தனைத் தகவல்கள்! எத்தனை செயல்பாடு கள்!
ஆதிசக்தி என்கிற ஒன்று தன்னுள்ளிருந்து பூமிமுதல் சந்திர சூரியர்வரை சகலத்தையும் படைத்து, அதற்கு இயக்ககதியை உருவாக்கி யளித்து, பின் பல்லாயிரம் உயிர்கள், அவற்றுக் கென உடல்கள்- அதிலெல்லாமும் ஒரு இயக்க விசையை உருவாக்கி, வாழ்வென்னும் ஒன்றையும் அவற்றுக்குள் அமைத்து, அந்த வாழ்வுக்குள் இப்படியெல்லாம் வாழ்ந்தால் சுகமென்றும்; இப்படியெல்லாம் வாழ்ந்தால் துன்பமென்றும் நெறிகளையும் வகைப்படுத்தி, அதை ஒரு கல்வியாகவே ஆக்கி வைத்திருக்கும் அந்த ஆதிசக்தி யின் செயல்பாடுகளை நினைக்கும்போதே பெரிதும் பிரம்மிப்பு தட்டி, ஒரு அளவுக்குமேல் சிந்திக்க முடியாமல் சிலைபோலாகிவிட்டான் ஜெனமேஜெயன்!
""ஜெனமேஜெயா...'' வியாசர் அவன் தோளைத் தொட்டு உசுப்பிவிட்டார். அவனும் அவரை ஏறிட்டான்.
""என்னாயிற்று?''
""பிரம்மிப்பில் புதைந்து போய்விட்டேன் ஸ்வாமி.''
""நினைத்தேன். இத்தனைக்கும் நான் தேவியின் பிரபாவங்களில் பாதியைக்கூட இன்னமும் கூறிமுடிக்கவில்லை.''
""அதற்கே எனக்கு இத்தனை பிரம்மிப்பென்றால், நீங்கள் மீத முள்ளதைச் சொன் னால் நான் மூர்ச்சை யாகி விடுவேனோ?''
""அப்படியெல்லாம் ஆகாது... இதில் இன் னொரு உண்மையும் பொதிந்துள்ளது. இந்த உலகத்து உயிர்களுள் நாமும் அடக்கம். அவ்வகையில் நாம் வேறு; இவை வேறல்ல. உலகின் சகலத் தோடும் நமக்கொரு இணைப்பும் உள்ளது; விடுவிப்பும் உள்ளது. இதைப் புரிந்துகொள்வதையே ஞானம் என்கிறோம்.''
""நீங்கள் தொடர்ந்து இவ்வாறு சொல்லி எனக்கொரு தெளிவை அளிப்பதற்காக நான் மிக மகிழ்கிறேன் ஸ்வாமி. உங்களுக்கு நான் மிகவே கடமைப்பட்டுள்ளேன்...''
""ஜெனமேஜெயா... நான் உனக்குச் சொல்வதுபோல் உலகுக்கும் சொல்கி றேன். எனக்கும் சொல்லிக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல; இப்படி சொல்வதும் ஒரு தேவிபூஜை! அப்படிப் பார்த்தால் நான் உன்பொருட்டு தேவிபூஜை செய்கி றேன். நாம் தேவிபூஜை செய்கிறோம்.''
""ஆம் ஸ்வாமி... இதுவும் ஒருவித தேவி பூஜையே... தேவி பற்றி அறிதல், தேவி யைப் புகழ்தல், சிந்தித்தல், வியத்தல், தியானித்தல் என்கிற எல்லாமே ஒருவகையில் பூஜையே...''
""அந்த பூஜையை மேலும் தொடர் வோம். நீ அறிந்திட இன்னமும் செய்திகள் உள்ளன.''
""கூறுங்கள் ஸ்வாமி... கேட்கத் தயாராக உள்ளேன்.''
""உன் தந்தையின் சாபநிவர்த்திக்கும், பித்ரு தோஷங்கள் நீங்கிடவும் மேற்கொள்ளப் பட்ட இந்த தேவி பாகவத விரிவுரையில் நான் பல சம்பவங்களை உனக்குச் சொல்ல வில்லை. ஏனென்றால் அச்சம்பவம் வாயிலாக அறியவேண்டியதை நீ ஏற்கெனவே அறிந்து விட்டதால், அதைத் தவிர்த்து புதிது புதிதாகவே கூறிவருகிறேன். அவ்வகையில் இப்போது நீ அறியப்போவது பிரகிருதியிடமிருந்து உண்டான மாறுபட்ட பல சக்திகளைப் பற்றியதாம்!
துர்க்கை, ராதை, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய ஐவரும் பஞ்ச பிரகிருதிகள் எனப்படுவர். இவர்கள் சிருஷ்டியின் முதலானவர்கள்- அதையே பிரகிருதிகள் என்கிறோம் தான்தோன்றியான தேவி, ஏனைய சிருஷ்களை உருவாக்க எண்ணிய சமயம் தன் வலப்பக்கம் ஆணுருவையும், இடப்பக்கம் பெண்ணுருவையும் கொண்டு காட்சிதந்தாள். இந்த இரட்டைக்கலப்பான உருவமே பிரம்ம சொரூபம்!
இதில் பெண்பகுதியிலிருந்து உருவானது சிவரூபம். இந்த சிவரூபத்திலிருந்து மேலும் ஐவகை பிரகிருதிகள் தோன்றினர். அதில் முதலாமவள் துர்க்கை; அடுத்தவள் லக்ஷ்மி; மூன்றாமவள் சரஸ்வதி; நான்காமவள் சாவித்திரி; ஐந்தாமவளே ராதை!
இவர்கள் தவிர மேலும் தேவியர்களை தான்தோன்றி தேவியானவள் சிருஷ்டித்தாள். அவை இவளது வலரூபத்தில்- அதாவது ஆண் பாகத்திலிருந்து தோன்றியதே விஷ்ணுரூபம். இந்த விஷ்ணு ரூபத்திலிருந்து மேலும் பல தேவியர் தோன்றினர்.
அவர்களில் முதலாமவள் கங்கை. இவளுக்கு ஜலரூபம். அடுத்தவள் துளசி; மூன்றாமவள் மானசா தேவி; நான்காமவள் சஷ்டிதேவி; ஐந்தாமவள் மங்களசண்டி.
இவர்கள் போக இவர்களுக்குள்ளிருந்து தேவைக்கேற்ப காளிதேவி, பூமாதேவி, சுவாஹாதேவி, தட்சிணாதேவி, தீட்சாதேவி, சுவதாதேவி, துஷ்டி தேவி, புஷ்டி தேவி, சம்பத்து தேவி, திருதி தேவி, மித்யாதேவி, சுசிலை, புத்திதேவி, மேதாதேவி, திரிதி தேவி, காந்தி தேவி, காலாக்னி தேவி, நித்ராதேவி, பிரபாதேவி, தாஹிகா தேவி, காலதேவி, ஜராதேவி, தந்த்ராதேவி, ப்ரீத்திதேவி என்று காலத்தால் பல தேவியர்கள் தோன்றி தங்களுக்குரிய பதிகளை அடைந்தனர்.
இத்தனை தேவிகளை மட்டும் நீ அறிந்தால் போதாது. இவர்கள்போல் வழிபாட்டுக்குரிய தேவிகளாக இல்லாமல்- ஆனால் வழிபட்டால் தவறில்லை எனும் நிலையில் மேன்மைமிக்க பல பெண் திலகங்களும் உள்ளனர்.
தேவமாதா அதிதி, பசுக்களின் தாயான காமதேனு, அசுரமாதா திதி, கர்த்துரு, வினதை, தனு, சந்திரன் மனைவி ரோகிணி, சூரிய பத்தினி ஸம்ஞா, மனுவின் மனைவி சதரூவை, இந்திரன் மனைவி சசி, குருவின் மனைவி தாரை, வசிஷ்டபத்தினி அருந்ததி, கௌதமர் பத்தினி அகலிகை, அத்திரிமுனி பத்தினி அனுசுயை, கர்த்தம பிரஜாபதி பத்தினி தேவஹீதி, தக்ஷன் பத்தினி பிரசூதி, பிதுர்களின் பத்தினி மேனகை, அகத்தியர் பத்தினி லோபமுத்ரா, குபேரன் பத்தினி குந்தி, வருண பத்தினி பிரசித்தி, வாயு பத்தினி விந்தியா, மேலும் தமயந்தி, யசோதா, தேவகி, காந்தாரி, திரௌபதி, சௌப்பியா, சத்யவதி, ரிஷபனின் தாயான குலோத்வஹா, மண்டோதரி, கௌசல்யா, சுபத்திரை, கௌரவி, ரேவதி, சத்யபாமா, காளிந்தி, லஷ்மணா தேவி, ஜாம்பவதி, அக்னிஜிதி, மிந்திரவிந்தை, லக்ஷ்மணை, ரும்மிணி, சீதை, காளி, பரிமளகந்தி, உஷா, சித்ரலேகா, பிரபாவதி, பானுமதி, மாயாவதி, ரேணுகா, பலராமர் தாயான ரோகிணி, கிருஷ்ணனின் சகோதரி ஏகதந்தை, துர்க்கை என்கிற இவர்கள் எல்லாருமே பிரகிருதியின் அம்சங்களே...
இவர்களை மூன்றுவிதமாக உத்தம, மத்திம, அதம ஸ்த்ரீகள் என்று அவர்கள் செயல் பாட்டுக்கேற்பப் பிரித்துள்ளனர். இந்த வேற்றுமைகூட ஒரு உருவாக்கமே... வேற்றுமை கள் இருந்தாலே ஒன்றின் தன்மை புரிபடும். அதே வேளை வேற்றுமையின்றி ஒருவர் நல்லவராக மட்டுமே இருப்பதாலும் பயனில்லை. மாறாத தன்மை கொண்டவையாக பொருட்கள் இருக்கலாம்; உயிர்கள் இருக்கமுடியாது.
குழந்தையாகப் பிறக்கின்ற நாம் மாற்றங் களாலேயே வளர்ந்து பெரியவர்களாகிறோம். மிகுந்த இளமையோடு ஒரு காலம்- முதுமையில் ஒரு காலம். அழகிய நாமே அழகற்றுப் போகிறோம். அப்படி இருந்தாலே வாழ்வு சுவை யானதாக இருந்திடும். எனவே எல்லாம் கொண்டதே வாழ்வு. இந்த எல்லாமுக்குள் நல்லவர்- தீயவர் என்பதும் அடக்கம். நல்லவரை உணர தீயவர் தேவைப்படுகிறார். தீயவர்களும் தீயவர்களாகவே இருப்பதில்லை. அது ஒரு நிலைப்பாடு.
இதையெல்லாம் உணர்ந்து தெளிவதே ஞானம்!
ஞானம் பிறந்துவிட்டால் கூடவே அமைதி பிறந்துவிடும். ஞானத்தின் மறுவடிவே அமைதி!
அமைதி ஒரு மனிதனுக்குப் பிடிபட்டு விட்டால் அதன்பின் அவன் அதை எந்த நாளும் இழக்காமல் தன் வாழ்வை அமைத்துக் கொள்வான். என்போன்றவர்கள் அவ்வாறே வாழ்ந்துவருகிறோம். நீயும் இதுபோன்ற பிரபாவங்களைக் கேட்டு மனம் தெளிந்து அமைதியடையவேண்டும். அப்படி அடைந்த அமைதியை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது.
ஒரு நாடகத்தில் நடிப்பவர்களுக்குள் அடி மனதில் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கிறோம்
என்பது தெரிந்தபடி இருக்குமே, அதுபோல இவ்வுலக வாழ்வும் ஒரு வேடம் என்கிற எண்ணமும், இந்த உலகமே ஒரு நாடகமேடை என்கிற புரிதலும் இருந்துவிட்டால் நடிப்பாக துக்கம் மற்றும் இன்பங்களை அனுபவிப்போம். நடிப்பு நிஜமல்லாததால் எப்படி நம்மை அந்த வேடங்கள் பாதிக்காதோ, அதுபோல் நம் வாழ்க்கையின் இன்ப- துன்பங்களும் நம்மை பாதித்திடாது'' என்று வியாசர் தேவியின் பிரபாவங்களோடு தன் சுயகருத்துகளையும் ஜெனமேஜெயனுக்கு எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து சரஸ்வதி கவசம் என்பது குறித்தும் வியாசர் கூறலானார்.
""ஜெனமேஜெயா... இப்பிரபஞ்சத்தில் மானுடப் பிறப்பெடுத்து தேவி பிரபாவங்களைக் கேட்டறிந்து சகலஞானமும் பெற்று அதனால் மனநிம்மதிக்கும் ஆளாகிவிட்ட நிலையில் நாம் கர்வம் கொள்ளாமலும், நாம் அறிந்தது குறைவு- அறியவேண்டியது இன்னும் உள்ளது என்கிற எண்ணமும் கொண்டு வாழ்வது முக்கியம்.
ஏனென்றால் தெளிந்த மனம் தெளிந்த நிலையில் அப்படியே இருக்காது. மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை ஆடச்செய்வது போல், நாம் தெளிந்துவிட்டபோதிலும் நம் தெளிவைக் கலைத்து நமக்குள் குழப்பம் ஏற்படுத்த காலம் முயலும். அது அதன் இயல்பு. எனவே காலத்தைக் குறை சொல்லுதல் கூடாது. நாம் குழம்பிடாமல் தெளிவோடு தொடர்ந்து வாழ்ந்திட நமக்குத் தேவை ஸ்திரபுத்தி. அதாவது உறுதியான புத்தி மற்றும் மனம். இதற்கு உதவுவதுதான் சரஸ்வதி கவசமாகும்.
சரஸ்வதி தேவியே ஆதிசக்தியின் திருமுகத் தில் உண்டானவள். இவளது அஷ்டாட்சர மந்திரம் மிக உத்தமமானது. இந்த அஷ்டாட் சர மந்திரத்தை ஸ்ரீமந் நாராயணமூர்த்தி கங்கைக்கரையில் வால்மீகி முனிவருக்கும், பத்ரிகாசிரமத்தில் பிரம்மன் பிருகு முனிவருக் கும், பிருகுமுனிவர் புஷ்கரத்வீபத்தில் சுக்கிரனுக்கும், சந்திரபர்வதத்தில் பிரகஸ் பதிக்கும், ஆதிசேஷன் பாணினிக்கும், பரத்வாஜருக்கும், சாகடாயனருக்கும் உபதேசித்தனர்.
இந்த மந்திரத்தை நான்கு லட்சம் முறை ஜெபிப்பது மிகுந்த பலனைத் தரும். இதை ஜெபிப்பவன் பிரகஸ்பதிக்கு ஈடாக விளங்குவான்!''
இவ்வாறு வியாசர் கூறவும் ஜெனமே ஜெயன், ""சரஸ்வதி கவசத்துக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஆதிசக்தி தன்னை வெளிக் காட்டாமல் தன்னிலிருந்து தோன்றிய சக்தி களை முன்னிலைப்படுத்துவது எதனால்?''
என்கிற ஒரு கேள்வியைக் கேட்டான்.
அதைக்கேட்டு சிரித்த வியாசர், ""ஜெனமே ஜெயா, நீ இந்த கேள்வியைக் கேட்பதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. சரஸ்வதி வேறு; ஆதிசக்தி வேறென்று நினைத்தே நீ இவ்வாறு கேட்கிறாய். இது தவறான சிந்தனை.
ஆதிதேவியின் ஞானவடிவமே சரஸ்வதி. எனவே சரஸ்வதியை வணங்குவதென்பதும் ஆதிதேவியான அந்த பராசக்தியை வணங்கு வதற்கு இணையானதே என்று உணர்வாயாக'' என்றார்.
""தவறாகக் கருதவேண்டாம். இதற்கு ஆதிதேவியையே வணங்கிவிடலாமே... எதற்கு இந்த ஏற்பாடு?''
""ஆதிசக்தியை பொதுவாக வணங்கு வதற்கும், நம் தேவை நிமித்தம் வணங்குவதற் கும் வித்தியாசம் உள்ளது. கல்விஞானம் வேண்டும் போது சரஸ்வதியைதான் வணங்கவேண்டும். சரஸ்வதி அருள் அதற்கே பயன்படும். அதே போல் பொன், பொருள் எனில் லக்ஷ்மிதேவி; தைரியம், வீரத்திற்கு பார்வதி என்று பகுப்புகள் இருப்பது நம் வசதிக்காகவே!''
""பக்தி வழிபாட்டுக்குள் கூடவா இத்தனை வேற்றுமைகள்?''
""ஆம்... ஒரு வீட்டினுள் எவ்வளவோ பொருட்கள் இருக்கும். அவை அவ்வளவையும் ஒவ்வொரு நொடியும் நாம் துய்ப்பதில்லை. நம் தேவைக்குப் பயன்படுத்துவோம். ஊஞ்சலில் அமர்ந்தாடுவோம்; படுக்கையில் படுத்துறங்கு வோம்; நாற்காலியில் அமர்ந்து பேசுவோம்;
சமையலறையில் விரும்பியதைச் செய்துண் போம். ஆனால் அவ்வளவும் ஒரு வீட்டுக்குள் தான் உள்ளன. இருப்பினும் அதற்குள் நாம் நம் துய்ப்புக்கேற்ப பயன்படுத்துவதுபோல்தான் இதுவும்... இது மானுட மனதின் தன்மைக்கேற்ப செய்யப்பட்டிருக்கும் ஒரு ஏற்பாடு!''
""அற்புதம் ஸ்வாமி... நமக்கொரு பிறப் பைத்தந்து, அப்பிறப்பில் இப்படித்தான் வாழவேண்டுமென்கிற நெறிகளைத் தந்து, அதன்படி வாழவைத்து, அம்பிகை நமக்குப் பக்கத்துணையாக இருக்கிறாள் என்பது புரிகிறது. நான் மிகவும் பாக்கியசாலி. என் தந்தை நிமித்தம் நான் மேற்கொண்ட தேவி பாகவத சஞ்சாரம் என் மனதையும் தெளிவு படுத்தி, எனக்குள் ஒரு பெரும் நிம்மதியையும் தந்துவிட்டது.
என் மனதில் இப்போது ஒளி மிகுந்துள்ளது!
எது நடந்தாலும் அதன்பின் ஒரு காரணம் இருப்பதை அறிகிறேன். துன்பம் வந்தாலும் அது இந்த உடலுக்கே- என் மனதிற் கல்ல. இன்பமும் அப்படியே... சுருக்கமாகக் கூறுவதானால் தாங்கள் தங்கள் உபதேசங் களால் என்னை சுத்திகரித்து மகத்தான ஞானி யாக்கிவிட்டீர்கள். நான் இதை என்றும் மறவேன். உங்கள் திருப்பெயர் எக்காலமும் விளங்கட்டும். தேவிபாகவதத்தை செவியிடுவர் எல்லாருக்கும் என் நினைவும் தோன்றட்டும். எனக்குக் கிடைத்த இந்த தெளிவும் பொலிவும் எல்லாருக்கும் கிடைத்து எல்லாரும் மகிழட்டும். வாழ்க தேவி புகழ்! வளர்க அவள் தண்ணருள்!'' என்று உணர்ச்சிமயமானான் ஜெனமேஜெயன்.
வியாசரும் மனமார வாழ்த்தியருளினார்.
முற்றும்